தென்காசி:தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வரும் நிலையில், அதன் அருகே சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி வணிகர்கள், சங்க பெருந்தலைவர் காமராஜர், தினசரி காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து அமைப்புகளும் இணைந்து, 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி-நெல்லை 4 வழிச் சாலை கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்ட நிலையில், மழைக் காலங்களில் நான்கு வழிச்சாலை போடும் ஒரு சில பகுதியில் நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், வேலைப்பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பல இன்னல்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேம்பாலப் பணி மேற்கொள்ளும் சாலையின் இரண்டு புறங்களில் உள்ள கடைகள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளது. மேம்பாலப் பணிக்காக அந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால், வியாபரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக காணப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் சகதியும், சேறுமாக உள்ளதாலும், மழைக்காலங்களில் அதிகப்படியாக தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, விரைந்து சாலைப் பணிகளை முடித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.