தென்காசி: புளியங்குடி மேற்கு பகுதியில் காலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் இன்று (ஆகஸ்ட் 7) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, அந்த வழியாக வந்த ஒரு வெறிநாய் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களை சரமாரியாக கடித்துக் குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனைதொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பத்து பேரும் தற்போது புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் துப்புரவு பணியாளர் ஒருவரும் அடக்கம். புளியங்குடி பகுதியில் தொடர்ந்து மக்களை வெறிநாய்கள் அச்சுறுத்தி வருவதாகவும், அவைகளை பிடித்து மாற்று இடத்தில் கொண்டுபோய் விடக்கோரியும் பலமுறை பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருந்து வந்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதேபோல் கடந்து சில தினங்களுக்கு முன்பதாக சங்கரன்கோவில் பகுதியில் வெறிநாய் கடித்ததில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து குருக்கள்பட்டி அரசு மருத்துவமனையிலும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நாயை பிடிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்கவும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் கோரிக்கை விடுத்தனர்.