குற்றால அருவியில் நீரின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குளிக்கத் தடை தென்காசி:தமிழகத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு இயற்கை பொக்கிஷங்களை தன்னகத்தை கொண்டுள்ளது. அந்த வகையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றாலம் அருவிகள் (Coutrallam Falls) இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. குற்றாலம் என்றாலே குளுமையான தென்றல் காற்று, ரம்மியமான மலை மற்றும் அருவிகள் தான் அனைவரது நினைவிற்கும் வரும்.
அத்தகைய குற்றாலம், தென்காசி நகர் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது. குற்றாலம் அருவிகளைப் போன்று, பிற மாவட்டங்களில் அருவிகள் இருந்தாலும் பெரும்பாலான அருவிகள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். அதேபோல, பெரும்பலான அருவிகள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்திருக்கும். ஆனால், குற்றாலம் அருவி மட்டுமே மக்கள் வசிக்கும் நகரில் அமைந்துள்ளது. ஆகவே, இது குற்றால அருவிக்கு உண்டான தனிச் சிறப்பு ஆகும்.
இது தவிர, மூலிகைச்சாறு கலந்த தண்ணீர் அருவிகளில் கொட்டுவதால் குற்றாலத்தில் குளிக்கும் போது பல்வேறு விதமான நோய்கள் தீரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன. பல ஆய்வுகள் இதை உறுதியும் செய்துள்ளன. பொதுவாக, குற்றாலம் தண்ணீரை குடித்தால் உடலுக்கு நல்லது என்று பலர் கூறுவர். ஆனால், அறிவியல் பூர்வமாக வியந்து பார்க்கும் அளவுக்கு எண்ணற்ற மூலிகைகள் அங்கு இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில், குற்றாலம் மலைப்பகுதியில் சுமார் 2,000 வகையான மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும், மரங்களும், செடிகளும், வண்ணமயமான மலர்களும் உள்ளன. மங்குஸ்தான், பலா, சப்போட்டா போன்ற பழங்களும் இங்கு கிடைக்கின்றன. இதனால் தான், குற்றாலம் மலையை, "பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை" என்பார்கள்.
மேலும், மூலிகைச் செடிகள் மண்ணோடு மண்ணாக மட்கியதில் இருந்து ஏராளமான கனிமங்கள் இங்கு படிந்து கிடக்கின்றன. ஆகவே, சீசன் நேரத்தில் இந்த மலையில் பாய்ந்து ஓடும் தண்ணீர், மூலிகைச்சாறு மற்றும் கனிமங்களோடு கலந்து அருவியில் கொட்டுவதால் அதில் குளிக்கும் போது பல்வேறு நோய்களும் குணமாகும் எனக் கூறப்படுகிறது. இது போண்ற காரணத்தால், குற்றாலம் 'தென்னகத்தின் ஸ்பா' என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் அருவிகளில் குளித்தால் மன அமைதி மற்றும் மனப்புத்துணர்ச்சி ஏற்படும்.
இப்படி முழுக்க முழுக்க இயற்கையால் உருவாகியுள்ள அருவியான குற்றாலத்தில் ஆண்டுதோறும், ஜூன் மாதம் சீசன் தொடங்கும். அதாவது, கேரளாவில் இருந்து தென்மேற்குப் பருவ காற்றோடு கலந்த மழைச்சாரல் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கிழக்கு நோக்கி வீசும். அப்போது, குற்றாலம் மலை மீது வீசும் மழைச்சாரல் பல்வேறு ஓடைகள் வழியாக பாய்ந்து ஓடி குற்றாலம் அருவிகளில் வந்து கொட்டுகிறது.
குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி, பாலருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி உட்பட ஒன்பது அருவிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் இங்கு களைக்கட்டும். அந்த நேரத்தில் தென்றல் காற்றுடன் கலந்த மழைச்சாரல் வீசும். மலைச்சாரலுடன் இதமான வானிலையை அனுபவித்தபடி குற்றாலம் அருவிகளில் குளிப்பது என்பது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த காரணத்தாலேயே, குற்றால சீசன் நேரத்தில் அருவிகளில் குளிப்பதற்காக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் லட்சக்கணக்கில் இங்கு வருவர்.
அந்த வகையில் தற்போது சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், குற்றால அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவி நீரின் சீற்றம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்கப் போலீசார் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முறையாகத் தொடங்கவில்லை. மேலும், இரவு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகக் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படாவிட்டாலும், தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருப்பதாலும் தண்ணீர் மண் கலந்து கலங்கி வருவதாலும் பாதுகாப்புக் கருதி அருவிகளில் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:தஞ்சை பெரியகோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்