தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்று வேலைக்கு தள்ளப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்! - tenkasi pottery workers

தென்காசி: கடந்த ஆண்டு செய்து வைத்த மண்பாண்ட பொருள்களே விற்பனையாகாத நிலையில் இந்த பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை பொருள்கள் செய்வதை கைவிட்டு மாற்று வேலைக்கு தள்ளப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு.

pottery workers
pottery workers

By

Published : Jan 11, 2021, 2:39 PM IST

Updated : Jan 14, 2021, 4:12 PM IST

இந்த கரோனா காலத்தில் பல தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மண்பாண்டம் செய்யும் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்,மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண்ணை இரண்டு நாட்களுக்கு ஊற வைத்து, பின்னர் மறுபடியும் தேவையான அளவு மண்ணோடு குழைத்து, களிமண் அச்சில் கைகளால் வார்த்தெடுத்து தேவையான அளவிற்கு பானையை வடிவமைத்து வெயிலில் ஒருநாள் முழுவதும் காய வைக்க வேண்டும். மறு நாள் கிட்டத்தட்ட 500 பானைகளை ஒரே அடுப்பில் வைத்து நெருப்பில் வேக வைத்து பானையை உருவாக்குகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர், தேன்பொத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மண்பாண்ட பொருள்களை பொறுத்தவரை மண்பானைகள், அடுப்புகள், அகல் விளக்குகள், பூந்தொட்டிகள், சிலைகள், கலை நயம் மிக்க பொருள்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையில் செய்து வருகின்றனர். பொதுவாக கார்த்திகை திருநாள், விநாயகர் சதுர்த்தி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் அதிகளவு மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நீடிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வகை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உடைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது காரணமாக லட்சக்கணக்கான மண்பாண்ட பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. புதியதாக ஆண்டு பிறந்த நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையில் ஏராளமான மண் பானைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும், ஆனால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையில் பானைகள் வாங்க ஆர்வம் காட்டாததன் காரணமாக மண்பானை செய்வதை கைவிட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பகவதி அம்மன் திருக்கோயில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மண்பாண்ட பொருட்கள் இங்கிருந்து விற்பனை செய்யப்படும். கேரள மாநிலத்திலும் தொற்று பரவல் நடவடிக்கையாக அந்த பண்டிகை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் மண்பானை தொழிலாளர்கள் தொழிலின்றி உள்ளனர்.

மாற்று வேலைக்கு தள்ளப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்

இதுகுறித்து தேன்பொத்தை கிராம மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ”கேரள மாநிலத்தில் மண்பாண்ட தொழில் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தமிழகத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் கண்டுகொள்ளப்படாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக பல மாற்று வேலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தற்போது பொங்கல் பண்டிகையில் பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் கரும்புகள் வழங்கப்படுவதுபோல், இனிவரும் காலங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து மன்பானைகள் கொள்முதல் செய்யப்பட்டு மண்பானைகள் வழங்கப்பட்டு வருமாயின் இத்தொழில் நிலைத்திருக்க சூழல் ஏற்படும். மேலும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால் மழை அதிகமாக இருக்கக்கூடும். எனவே மழைக்கால நிவாரண நிதி ஆண்டுக்கு ஒரு முறை வழங்குவதை இரண்டு முறை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated : Jan 14, 2021, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details