தென்காசி: தென்காசி ரயில் நிலையம் என்பது நெல்லை - தென்காசி, விருதுநகர் - தென்காசி - கொல்லம் போன்ற வழித்தடங்களின் மிக முக்கியமான சந்திப்பு ஆகும். இதில் கொல்லம் - தென்காசி - அம்பாசமுத்திரம் - நெல்லை வழித்தடமானது கடந்த 1904 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது ரயில்கள் இயங்கி வருகின்றன. மேலும் தென்காசி - இராஜபாளையம் - விருதுநகர் வழித்தடமானது கடந்த 1927ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு, பின்னர் 2004-ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பொதிகை சிலம்பு, கொல்லம் மெயில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
அடிப்படை கட்டமைப்பு: தென்காசியை சேர்ந்த ரயில் ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், "செங்கோட்டை - தென்காசி இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்தல், தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்தி டெர்மினல் ரயில் நிலையமாக மாற்றுதல்.
மேலும் நெல்லையிலிருந்து அம்பை, ராஜபாளையம் வழியாக செல்லும் ரயில்களுக்கு என்ஜின் மாற்றாமலேயே பைபாஸில் செல்லும் வகையில் தென்காசி ரயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைத்தல். பாவூர்சத்திரம், கடையம், அம்பை, சேரன்மகாதேவி ரயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு கோரிக்கைகள் பிரதானமாக உள்ளன.
புதிய ரயில்கள் மற்றும் ரயில்கள் நீட்டிப்பு:ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றுதல். பிலாஸ்பூர் ரயிலின் காலிப் பெட்டிகளைக் கொண்டு நெல்லையிலிருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரயில் இயக்குதல். பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரயிலாக இயக்குதல்.