தென்காசி:தென்காசி மாவட்டத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் விவசாயிகளின் வேளாண் உற்பத்தி முறைகள் குறித்தும் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்டமாக சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள பனையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசன திட்டத்தை செயல்படுத்த 15 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மையப்பகுதியில் அரசு செலவில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் அதில் செய்ய உள்ள விவசாய முறைகள் குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார், மாவட்ட ஆட்சியர்.
இதனைத்தொடர்ந்து, அதே பகுதியைச்சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டு தற்போது தனது நிலத்தில் கோக்கோ மரக்கன்றுகளை அரசு மானியத்தில் வாங்கி, கோக்கோ பழங்களை சாகுபடி செய்து, தனியார் சாக்லேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கோக்கோ விதைகளை தனது பண்ணை வளாகத்தில் சுத்தம் செய்து விற்பனை செய்து வருகிறார். அவரது, தோட்டத்தில் தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் லாபத்தையும் தேனீ வளர்ப்பால் விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.