தென்காசி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்விற்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், உருமாறிய கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அருவி கரையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தகுந்த இடைவெளி முகக்கவசம் ஆகியவற்றை பயணிகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், "பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சவாலாக உள்ளது. மேலும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையில் சுற்றுலாப்பயணிகள் குவிய வாய்ப்புள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குற்றால அருவியில் ஆட்சியர் ஆய்வு மாவட்டத்தில் லண்டம் மற்றும் ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 19 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா உறுதி செய்யப்படவில்லை. அந்த வகையில் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே இதை நிலைநிறுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், கவனக்குறைவாக இருக்க வேண்டாம்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்குக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி