தென்காசி:ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழா திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். வருடா வருடம் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவுக்கு, மிகவும் பெயர் பெற்ற ஸ்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 13ஆம் தேதி கந்த சஷ்டி திருநாள் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கந்த சஷ்டி திருவிழா நாட்களில் சுவாமி காலை, இரவு என தினமும் இரு முறை மயில், குதிரை போன்ற வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து, 6ஆம் திருநாளான நேற்று காலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழாவிற்காக சுவாமி, மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து விரதம் இருந்து அசுரன் போல் வேடமணிந்து மகாசூரன், யானமுகாசூரன், சிங்க மகாசூரன் ஆகியோரை முருகப்பெருமான் பக்தர்களின் ‘வேல் வேல் அரோகரா’ என்ற கோஷத்துடன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசன்ம் செய்தனர்.