சாலையைக் கடந்த சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து தென்காசி: ஆலங்குளம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மின்னல் வேகத்தில் வந்த பைக் அதிவேகமாக மோதியதில் சிறுவனுக்கு கால் முறிந்தது. மேலும், சிறுவன் மீது பைக் மோதிய சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் தனியார் வங்கி அருகே செல்லும் சாலையில், விஸ்வாமித்திரன் என்பவரது மகன் ஆத்தியப்பன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சிறுவன் ஆத்தியப்பன் அருகில் இருந்த கடைக்குச் சென்று விட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வாகனம் வருகிறதா என்பதை மட்டும் கவனித்து விட்டு இருபுறமும் கவனிக்காமல் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளான்.
இதையும் படிங்க: தென்காசி: சிறையில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் அடித்ததால் மரணம் என உறவினர்கள் மறியல்!
அப்போது, சிறுவனின் பின்னால் மின்னல் வேகத்தில் அதிவேகமாக வந்த பைக் சிறுவன் மீது மோதி இழுத்துச் சென்று உள்ளது. இந்த விபத்தில் சிறுவனுக்கு முகம் மற்றும் வலது காலில் அடிபட்டு ரத்தம் வந்து உள்ளது. எனவே, உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று சிறுவனை மீட்டு உள்ளனர்.
இருப்பினும் பைக்கை ஓட்டிச் சென்று சிறுவன் மீது மோதிய நபரும் பைக்கை சாலை ஓரம் நிறுத்திவிட்டு, சிறுவனின் உடல் நிலையைக் காண என அருகில் சென்று பார்த்து உள்ளார். இதனையடுத்து, உடனடியாக சிறுவனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திரா: சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியதில் 3 யானைகள் பலி
இதனிடையே, சிறுவனின் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். ஆனால், மருத்துவமனை வளாகம் வரை சிறுவன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நபர் வந்த நிலையில், திடீரென அங்கிருந்து மறைந்து உள்ளார்.
இந்த விபத்தில் சிறுவனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிறுவன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது சிறுவன் மீது பைக் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 45 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான பயணம்.. பள்ளி செல்ல பரிதவிக்கும் மாணவர்கள்.. கிருஷ்ணகிரி மாவட்ட அவலம்!