நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து சீமான் பேசும்போது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு செய்யப்படும் போதும், அர்ச்சனை செய்யப்படும் போதும் தமிழில்தான் செய்யப்பட வேண்டும். வழிபாடு, வழக்காடு மன்றம், பள்ளிக்கல்வி நிறுவனம், அரசு அலுவலகங்கள் என அனைத்தில் இருந்தும் தமிழ் வெளியேறி உள்ளது. மேலும், தமிழர் நாக்கில் இருந்தும் தமிழ் வெளியேறி உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவையில் இலகா மாற்றுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பிய விகாரம் தேவையில்லாதது எனவும், எட்டு கோடி மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம் நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்கு எப்படி ஏன் வந்தது என சாடினார்.
நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி தராது எனவும், ஆனால் கல் குவாரியை பார்வையிடச் சென்றால் காவல் துறை பதறுகிறது எனவும் தெரிவித்தார். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதுபோல் மலைகளை வெட்டி சாப்பிடுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினர்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீரவணக்க நாளிற்கு அரசு 144 தடை உத்தரவு அளிப்பது அவமதிப்பாக இருப்பதாக கருதுகிறேன் எனக் கூறிய அவர், அந்த நாட்களில் பதட்டத்தை உருவாக்கும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் தினமும், நாம் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, கூட்டணி குறித்த செய்தியாளர் கேள்விக்கு எந்த காலத்திலும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டோம் என கூறினார். மேலும், நாங்கள் இந்தியனும் இல்லை, திராவிடனும் இல்லை, நாங்கள் தமிழர் எனவும், பாமக ராமதாஸ், தேமுதிக விஜயகாந்த், மதிமுக வைகோ, விசிக திருமாவளவன் போன்றோர் செய்த தவறை இனி நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்த அவர், தனித்து செயல்படுவோம் என கூறினார்.
கோயிலுக்குச் சென்று திரும்பியவர்கள் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிப்பதற்கு அரசு முன் வரவில்லை என்ற கேள்விக்கு, “கோயிலுக்கு போய் திரும்பியவர்கள் சாலை விபத்தில் இறந்ததற்கும், இவர்களுக்கும் சம்பந்தமில்லை.
ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் விஷயத்தில், அரசிற்கு சம்பந்தம் உள்ளது. ஏனென்றால், விஷச் சாராயத்தை காய்ச்சுபவர்கள் திமுகதான்” என குற்றம் சாட்டிய அவர், அதற்காகத்தான் நிதி உதவி அளிக்க அரசு முன்வந்தது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Kallanai Dam: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.. மலர் தூவி திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு!