தென்காசி:சங்கரன்கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை அடுத்து நேற்று (ஜூலை 19) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் நேற்று மாலைக்குள் சம்பள வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
உறுதி அளித்தபடி நேற்று நகராட்சியின் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவே ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கரன்கோவில் நகராட்சி சுகாதார அலுவலகத்தில் முன்னர் அமர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சங்கரன்கோவில் நகர் முழுவதும் தூய்மைப் பணிகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என 2 ஆம் நாளாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை கவுன்சிலர், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் என யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும் காலையிலிருந்து ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நிலையில் சுமார் 2 மணி வரை போராட்டம் தொடர்ந்து நிலையில் எந்த பணியாளர்களும் அவருடைய வேலைக்குச் செல்லாததால் சங்கரன்கோவில் சுற்றிலும் உள்ள குப்பைகள் அப்படியே இருந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.