பொங்கல் பண்டிகையையொட்டி சூடுபிடிக்கும் பனங்கிழங்கு விற்பனை தென்காசி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு பல்வேறு விதமான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சந்தையில் 'பனங்கிழங்கு' விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் போதியளவு மழை பெய்ததன் காரணமாக பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் நெல் மணிகள், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்ட சுற்று வட்டாரங்களில் ஏராளமான விவசாயிகள் பனங்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். மூன்று மாத பயிரான பனங்கிழங்குகளை தற்போது, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, பனங்கிழங்கிற்கு பெயர் பெற்ற ஊரான சேர்ந்தமரம் அருகே உள்ள தன்னூத்து கிராமத்தில், பயிரிடப்பட்ட பனங்கிழங்குகளைத் தோண்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள் கட்டுக்கட்டாக விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை விட விளைச்சல் அதிகம் என்பதால் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர். 25 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பனங்கிழங்கு விற்பனையானது களைக்கட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “பொங்கல் திருநாளில் மஞ்சள் கிழங்கு, கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கலை கொண்டாடும் விதமாக, பனங்கிழங்குகளை இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். பனங்கிழங்கில் அதிகப்படியான நார்சத்து உள்ளது. ஏராளமான பொதுமக்களும் இவற்றை வாங்கி கொண்டு செல்கின்றனர்” என்று கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சேர்ந்தமரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்கு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழக மக்கள் அயோத்தி செல்ல அறநிலையத்துறை உதவ வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!