உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டிவருகின்றன. பிரதமரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு பிரபலங்கள், தொழிலதிபர்கள் தாமாக முன்வந்து கரோனா நிதி வழங்கிவருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி கேட்டு பல நாள்களாகியும் தற்போதுதான் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் கரோனா நிதி வழங்கத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் யாரும் எதிர்பாராதவகையில் தென்காசி மாவட்டத்தில் கரோனா நிதிக்காக அரசுப் பேருந்து முன்னாள் நடத்துநர் ஒருவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவயதிலேயே நாட்டுப்பற்று!
தென்காசி மாவட்டம் சுரண்டைப் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் (60). அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தனது சிறு வயதுமுதலே நாட்டின் மீது அதிகப் பற்றுகொண்டுள்ளார். அதன் காரணமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுச் சேவை செய்துவருகிறார். தான் பணிபுரிந்தபோது பேருந்தில் பயணிக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து வாழ்க்கையில் நம்பிக்கை அளித்துவந்துள்ளார்.
நாட்டின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வரதராஜ் திருமணம் செய்துகொள்ளாமல் தனி ஆளாக வாழ்ந்துவருகிறார். தான் வசிக்கும் நிலத்தைச் சுற்றிலும் நாட்டுப்பற்றை பறைசாற்றும்வகையில் தியாகிகள் முன்னாள் தலைவர்களின் பொன்மொழிகளைச் சுவரில் எழுதிவைத்துள்ளார். மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத் தனது இல்லத்தை ஒரு பாடசாலையைப் போன்று பராமரித்துவருகிறார். விடுமுறை நாள்கள், பணி ஓய்வு நேரங்களில் வரதராஜ் அன்றாட நாளிதழ்கள், பிற நூல்களிலிருந்து பொதுத் தகவல்களைச் சேகரித்து அதைப் புத்தகமாக எழுதி மாணவர்களுக்குப் போதித்துவந்துள்ளார்.
அதேபோல் அவரது சிறு வயதிலேயே தனது பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு வரதராஜ் கல்வி போதித்துவந்துள்ளார். இப்படி நாட்டின் மீது அதிக பற்றுடன் வாழ்ந்துவரும் வரதராஜ், கரோனா பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் கண்டு கவலை அடைந்தார்.