தென்காசி: கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடியில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாடசாமி என்பவரது மகனான தங்கசாமி (26) என்பவரும், அவரது பாட்டி முப்பிலி மாடசாமி என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களை புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் தங்கசாமி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், தங்கசாமியை காவல் துறையினர் கடுமையாக தாக்கி சிறையில் அடைத்ததால்தான் அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட தங்கசாமியின் உறவினர்கள், புளியங்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஆட்கள் பற்றாக்குறையினால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. மேலும், புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே உறவினர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Kanyakumari: காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை; கன்னியாகுமரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!