தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tenkasi தபால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்!

தென்காசியில் இன்று (ஜூலை 13) காலை தபால் ஓட்டுகளின் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

Tenkasi postal vote counting stopped
தென்காசி தபால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

By

Published : Jul 13, 2023, 1:03 PM IST

தென்காசி: தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனைவிட 370 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தலில் பதிவான தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடை பெற்றதாகவும் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

இன்று (ஜூலை 13) தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மீண்டும் என்னும் பணிகள் தொடங்கியது. தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் லாவண்யா முன்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தனர்.

குறிப்பாக வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார், அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உட்பட வேட்பாளர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கை திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மொத்தம் 2833 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 2490 வாக்குகள் செல்லத் தகுந்தவை என்றும்; 343 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்றும் தீர்மானிக்கப்பட்டது. எனவே, 2490 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட இருப்பதால் ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டது அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனிடையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது தபால் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை 13ஏ, 13 பி, 13 சி என்று மூன்று படிவங்கள் தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

  • 13 ஏ படிவத்தில் தபால் வாக்கு பதிவு செய்யும் வாக்காளர்கள் தங்களின் சுய முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்
  • 13 பி படிவத்தில் வாக்காளர்கள் வாக்களித்த வாக்குச்சீட்டின் கவர் இடம்பெற்றிருக்கும்.
  • 13 சி படிவத்தில் பதிவான வாக்குச்சீட்டுகள் இடம் பெற்றிருக்கும்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 13 சி படிவத்தை நாங்கள் சரிபார்க்க வேண்டும் என்று ஓட்டு எண்ணும் அதிகாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் 13 சி படிவம், தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதைக் காண்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது 13 ஏ படிவத்தில் வேட்பாளர்களின் சுய முகவரி இருக்கும். எனவே 13 ஏ படிவத்தில் சுய முகவரி இடம்பெற்ற எண்ணிக்கையும் 13 சி படிவத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் ஒரே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாகவே அதிமுக வேட்பாளர் குற்றம்சாட்டி வருகிறார்.

அதனால் தான் அதிமுக வேட்பாளர் 13 சி படிவத்தை சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதே சமயம் 13 சி படிவத்தை வழங்க அதிகாரிகள் மறுப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

ஆட்சியர் தற்பொழுது வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் தென்காசி தபால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tenkasi: தென்காசி தொகுதியில் தபால் ஓட்டுகளின் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details