புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு தென்காசி: வாசுதேவநல்லூரில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் பாராட்டு விழா கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின், செய்தியாளரைச் சந்தித்த கிருஷ்ணசாமி கூறுகையில், ‘2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை புதிய தமிழகம் கட்சி கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது. ஒரு நாடாளுமன்றத் தேர்தலை, ஒரு அரசியல் கட்சி எப்படி சந்திக்க வேண்டுமோ, அதன் அடிப்படையில் ஒரு நியாயமான தேர்தல் நடக்க வேண்டும். மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் தோல்விகளை, புதிய தமிழகம் கட்சியின் பயிற்சி முகாம்கள் சார்பில் கொண்டு செல்ல உள்ளோம்.
ஆளும் கட்சி, கொடுத்த வாக்குறுதியை மீறுகின்றது. தேர்தல் வாக்குறுதியின்படி, அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும். வரும் டிசம்பர் 16ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 26ஆம் ஆண்டு விழாவையொட்டி, பூரண மதுவிலக்கு மாநாடு நடைபெறும்.
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று 20,000 ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போரட்டத்தை காவல்துறையை வைத்து ஆளும் கட்சியினர் களைத்தனர். டெட் தேர்வில் தகுதி பெற்றால் ஆசிரியர்களுக்கு வேலை கொடுப்பதுதான் நியாயம். ஆனால் வேலை கொடுக்கவில்லை.
ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து போராடிய நிலையில், கோரிக்கையை ஆளும் கட்சி நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியினர் ஜனநாயகம், நீதி, நேர்மை, நியாயம் பேசினார்கள். இன்றைக்கு ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தை பலப்படுத்துவது, கட்சிக்காரர்களை வளப்படுத்துவது என குறியாக உள்ளனர். ஆளும் கட்சியினர் மக்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை.
மத்திய அரசு, நீண்ட நாள் நிறைவேற்றப்படாத மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அது தவறு என்று சொன்னால் என்ன அர்த்தம்? எது செய்தாலும், நாங்கள் செய்தால் நன்மை, மற்றவர்கள் செய்தால் தவறு என்று சொல்வது ஏற்புடையது அல்ல. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை வைத்து கர்நாடக அரசிடம் பேசி, காவிரி உரிமையைப் பெற்று தமிழக மக்களுக்கு வழங்குவதில் தோல்வியடைந்து விட்டது, திமுக.
கட்சத்தீவு உரிமை, காவிரி உரிமை, மீனவர்கள் உரிமை என அனைத்தையும் தன்னுடைய சுயநலத்திற்காக ஆளும் கட்சியினர் விட்டு கொடுக்கிறார்கள். மேலும், தினமும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றால், அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என்றே அர்த்தம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர இன்றும், நாளையும் புதிதாக விண்ணப்பிக்கலாம்!