தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "கிராமசபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்தந்த பகுதியினுடைய ஊராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பொது மக்களை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திமுக, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பேசி சட்ட ரீதியாக, காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும். தமிழக முதலமைச்சர் கூட்டணியை மனதில் வைத்துக் கொண்டு, தமிழகத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. பாஜக - அதிமுக கூட்டணி விரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பக்கூடிய சூழலில், இந்த வகையான விரிசல் என்பது ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு கட்சிகளுமே நீண்ட தூரம் விலகிச் சென்றுவிட்டனர். அந்த வகையில் மீண்டும் இவர்களை இணைக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தளவில் அதிகப்படியான கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்.