அரசு விடுமுறை என லீவு போட்ட மருத்துவர்.. வாசுதேவநல்லூர் பொதுமக்கள் அவதி! தென்காசி: சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். மேலும் சிலர், தினசரி கூலி வேலைகள் பார்த்து தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட, பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இங்கு ஊராட்சி மன்ற அலுவலக பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய பொது மக்களுக்கு, சரியான முறையில் சிகிச்சைகள் வழங்கப்படாததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய வயதான பாட்டி ஒருவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், தனது நிலையை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என, அங்கு இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு சென்ற அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். ஆனால் மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். எனவே, 10 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்த பாட்டி, பதினோரு மணி வரை அரசு மருத்துவமனையில் காத்திருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் செவிலியர் பாட்டியை பரிசோத்து விட்டு, மாத்திரை மட்டும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, செவிலியரிடம் மருத்துவர் எங்கே? என்று பாட்டி கேட்டதற்கு, இன்று (அக்.24) அரசு விடுமுறை என்பதால் மருத்துவர்கள் வரமாட்டார்கள் எனக் கூறியுள்ளார். பின்பு மாத்திரையை மட்டும் வாங்கிச் சென்ற பாட்டியிடம், பாட்டி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ், நடந்த அனைத்தையும் கேட்டுத் தெரிந்துள்ளார்.
11 மணி ஆன பின்பும் மருத்துவர் வராததால், பொதுமக்கள் சிகிச்சைக்காக சிரமப்படுவதை அறிந்த அவர், இதுகுறித்து சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை செவிலியரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், "யாரேனும் தீவிர அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தால் என்ன செய்வீர்கள்" எனக் கேட்டுள்ளார். அதற்கு, "நாங்கள் இங்கே சிகிச்சைக்கு வரக்கூடிய நபர்களை வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புவோம்" என செவிலியர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உதவி எண் மையத்திற்கு தொடர்பு கொண்டும் பேசியுள்ளார். அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோர், இத்தகைய சிரமத்திற்கு உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. எனவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:காரிமங்கலம் 5.9 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம்; தலைமறைவாக இருந்த 3 பேர் கைது!