மலர் சந்தையில் கடந்த வாரம் 400 ரூபாய் விற்கப்பட்ட கனகாம்பரம் தற்பொழுது 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தென்காசி:சங்கரன்கோவில் மலர் சந்தையில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் தற்பொழுது 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மலர்ச் சந்தையில் ஏலம் மூலமாக மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரிகளுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு பெருமளவு அரளிப்பூ, பிச்சிப்பூ, மல்லிகைப்பூ, வாடாமல்லி, மரிக்கொழுந்து, கேந்திபூ, கனகாம்பரம், கோழி கொண்டை சேவல் பூ, சம்மங்கி என பல்வேறு வகையான பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பூக்களை தினந்தோறும் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் சுப நிகழ்ச்சிகள் குறைவாக இருந்ததால், இந்நிலையில் மலர் சந்தையில் பூக்களின் விலையும் குறைவாக விற்கப்பட்டு வந்துள்ளது. தற்போது நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் பூக்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
போன வாரம் மலர் சந்தையில் கனகாம்பரம் 400 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது ஒரு கிலோ கனகாம்பரம் ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. மேலும் சுபமுகூர்த்த தினத்தில் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகளின் மத்தியில் பெரும் அளவில் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகின்றது.
இதையும் படிங்க: Chennai Gate Rice: காவிரி தாயின் மடியா? ரேசன் கடையா? : பங்குதாரர் பரபரப்பு வாக்குமூலம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட்19ஆம் தேதி) நிலவரப்படி, கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 400 ரூபாய்க்கும், மல்லிகை ரூ 750, கேந்தி ரூ 80, அரளி ரூ 20 (பாக்கெட் 200 கிராம்), சம்பங்கி ரூ 400, வாடாமல்லி ரூ 60, ரோஜா ரூ 210, மரிக்கொழுந்து ரூ 50, கோழிக்கொண்டை ரூ 100, தாமரை(1) ரூ 10 உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக விலை அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று சங்கரன்கோவிலில் வாழை இலையின் விலை உயர்ந்து ஒரு கட்டு (200 இலை அடங்கியது) 2000 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக ஒரு கட்டு இலையின் விலை 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. நாளை மற்றும் நாளை மறுநாள் வளர்பிறை சுபமுகூர்த்தம் இருப்பதால் வாழை இலையின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது காற்றாடி காலம் என்பதால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் வாழை மரங்களில் இலைகளை அறுப்பதற்கு முன்பாகவே இலை கிழிந்து அதிக அளவில் சேதம் அடைவதாலும், இதன் காரணமாக விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஒரு கட்டு வாழை இலையின் விலை 2000 ரூபாயாக உயர்ந்துள்ள இச்சூழ்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சுப முகூர்த்த தினத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த உள்ள குடும்பத்தார்கள் வாழை இலைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: "கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான்" - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!