தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், திமுகவைச் சேர்ந்த ராமலஷ்மி என்பவர் நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்ற இவர், முதலில் அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதரவுடன் தலைவராகப் பதவியேற்றார்.
கடந்த மாதம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இந்தச் சம்பவம் அதிமுக மற்றும் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகர் மன்றத் தலைவர் ராமலஷ்மி திமுகவில் சேர்ந்த நாள் முதல், நகர்மன்றக் கூட்டம் நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று(மே.10) செங்கோட்டை நகராட்சியின் நகர திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதலே, அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர். தங்களது வார்டுகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், இது தொடர்பாக அதிகாரிகளிடமோ நகர்மன்றத் தலைவரிடமோ புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.