பொதுமக்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் தனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரின் மையப்பகுதியில், மழை நீரானது சாக்கடைபோல் தேங்கி உள்ளது. மேலும் பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கும் தெருக்கள் வழியாக, கழிவு நீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சாலையோரப் பகுதிகளில் கழிவு நீரும், மழை நீரும் செல்ல வழியில்லாமல் ஒரே இடத்தில் குளம் போல் தேங்கியுள்ளதால், அப்பகுதியைக் கடந்து செல்ல சிரமமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால், சில மாதங்களுக்கு முன்னர் கால்வாய் கழிவு நீரை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால், அந்த மனுவை கிடப்பில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் அப்பகுதியினர் தங்கள் பகுதிக்கு எந்த விதமான நலத்திட்ட வசதிகளும் செய்வதில்லை என புகார் அளித்துள்ளனர். பின்னர், அந்த மனுவை ஏற்று நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில், புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழிகள் தோண்டப்பட்டு தீவிரமாக நடைபெற்று வந்த பணியானது, முடியும் தருவாயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆகையால், இந்த செயலைக் கண்டித்து காலை முதல் மாலை வரை அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நிர்வாகத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிப்பவர் கூறுகையில், “பலமுறை பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அனுப்பியுள்ளோம். மழை பெய்தால் அந்த தண்ணீர் செல்ல வழியில்லை. அதனை சீரமைக்க 2022-இல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 58 லட்சம் ஒதுக்கப்பட்டது. தற்போது சுமார் 75 சதவீதம் பணி முடிந்த நிலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள ஆற்றில் இந்த கழிவு நீர் கலக்கும் என மனு அளித்து பணியை நிறுத்திவிட்டனர்.
ஆனால், அதனை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் மனு அளித்தோம், எந்தவித பலனும் இல்லை. தற்போது பாதியில் நிறுத்தப்பட்ட பணி முடிய வேண்டும். எங்கள் ஊரில் பேருந்து நின்று செல்ல வேண்டும். ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், பெண்கள் பொதுக் கழிவறை சுகாதாரமற்று உள்ளதை பராமரிக்க வேண்டும், இதுதான் எங்களது கோரிக்கை. இது நிறைவேறவில்லை என்றால் போராட்டம் மீண்டும் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி அருகில் 91 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்