தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி அருகே தசைநார் பிடிப்பு நோயால் தவிக்கும் மக்கள்.. அரசின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் மாற்றுத்திறனாளிகள்! - tenkasi district

Tenkasi news: தென்காசி மாவட்டம் கடையம் பேரூராட்சி அருகே ஒரே ஊரில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்று தவித்து வருகின்றனர். 200 குடும்பத்தில் இருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மாற்றுத்திறனாளியாக இருந்து வரும் நிலையில், அவர்களின் தவிப்பு பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 10:36 PM IST

Updated : Oct 12, 2023, 8:03 AM IST

தென்காசி

தென்காசி: பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒரே பகுதியில் வாழ்ந்து வருவதென்பது ஆய்வுக்கு உள்ளாக்கப்படக் கூடிய ஒன்றாகவே காணமுடிகிறது. இதில் நான்கு வயது முதல் இயல்பாக இருந்தவர்கள் கூட 'தசைநார் பிடிப்பு' மூலம், பெரும்பாலானவர்கள் கால்கள் மற்றும் கைகள் செயல்படாத நிலையில் வாழ்வை பெரும் போராட்டமாகவே கழித்து வருகின்றனர்.

கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் வசித்து வருகின்றனர். தசைநார் பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளாகவே அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களின் இல்லத்திற்குச் சென்று பார்த்த போது, மூன்று பேர் படுத்த படுக்கையாகவும், மற்ற இரு மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்து கொண்டு சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு உதவுவது, ஒருபுறம் மனதை நெகிழ வைத்தாலும், மறுபுறம் அவர்களின் நிலை வருத்தமளிக்கிறது.

வருமானத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அரசு திட்டங்கள் ஏதேனும் மூலம் இவர்கள் பயனடைவார்காளா என்று சிந்தித்தாலும், அதுவும் கேள்விக்குறியே. அரசு கொடுக்கக் கூடிய ஆயிரம் முதல் 2000 ரூபாய்கள், அவர்களின் தகுதிக்கேற்ப அரசு வழங்கினாலும் கூட, நடக்க இயலாமல் கிடப்பிலேயே கிடக்கும் மாற்றுதிறனாளிகள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இன்னும் சொல்லப்போனால் ஒரு சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களில் மூன்று அல்லது நான்கு பேர் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளாகவே இருக்கின்றனர்.

இவர்களின் நிலை அறிந்து ஈடிவி தமிழ்நாடு செய்தியாளர் இந்தப் பகுதியில் இருக்கும் சிலக் குடும்பங்களை சந்தித்து பேசுகையில், அவர்களின் அடிப்படை மற்றும் அத்தியாயக் கடமைகளை செய்வதற்குக்கூட இயலாத நிலையில் அந்த 200 குடும்பங்களும் தவித்து வருவதை வேதனையுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் இவர்களின் நிலை அறிந்து, இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார் சமூக ஆர்வலரான முஸ்தபா ராஜா.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கு தேவைப்படும் ஒரு சில பொருட்களையும் வழங்கி வருகின்றார். இவரின் நற்செயல் அந்த மாற்றுத்திறனாளி மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. மேலும் இவரின் உதவிக்கரம் அப்பகுதி மக்களால் அதிகளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது. சமூக ஆர்வலர் முஸ்தபா ராஜாவைத் தொடர்ந்து, அதேப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும் அவரால் முயன்ற உதவியை செய்து வருகிறார். இப்படி இருவரும் அவர்களால் முடிந்த உதவிகளை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய முஸ்தபா, "தன்னுடைய கடமையை தானாகவே செய்ய முடியாத நிலை இங்கு வசிக்கக்கூடியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பிறந்த போது, இவர்கள் பெற்றோர் எவ்வாறு பார்த்துக்கொண்டனரோ அதேபோல்தான், இன்றுவரையும் அவர்களை அப்படித்தான் பார்த்துக் கொள்கிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த சிலக் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். தையல் இயந்திரம் வாங்கி கொடுத்துள்ளோம். இதனால் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கான வருமானத்தை அவர்களே ஈட்டிக்கொள்கின்றனர். கல்வி, அடிப்படை தேவைகள் இப்படி எங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறோம். இந்த பகுதி மக்களின் நிலை அறிந்து உதவ பலரும் முன்வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அப்பகுதியில் வசிக்கும் மங்களம் என்பவர் கூறுகையில், "எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளுமே மாற்றுத்திறனாளியாக உள்ளனர். பிறப்பில் இருந்தே என் பிள்ளைகள் தசைநார் பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய பொருளாதாரம் இல்லாததால் இவர்களுக்கான வைத்தியங்கள் பார்க்க இயலவில்லை. சமீபத்தில்தான், என் ஒரு மகள் இறந்தார். போதிய வசதிகள் மற்றும் சிகிச்சை கிடைக்காததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். எங்களின் நிலை அறிந்து அரசு எங்களுக்கு உதவ முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், அதிகமாக மாற்றுத் திறனாளிகள் இருக்கக்கூடிய இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். அதைப்போல ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளையும் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து, அவர்களின் குடும்பத்தில் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் மாற்றுத்திறனாளியாக இருக்கும்பட்சத்தில், அவர்களை அரவணைத்து பாதுகாப்பு வழங்கும் வகையில் அரசு உதவித்தொகை அளிக்க வேண்டும். தொடர்ந்து சேவையாற்றும் தன்னார்வலர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கவும் அப்பகுதி தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை மின்சார ரயில்கள் நாளை ரத்து.. எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

Last Updated : Oct 12, 2023, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details