தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பிஸ்மி நாலாவது தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர் (51). இவரது மகன் அபு என்ற முகம்மது சித்திக் (25). இவர், கடந்த 5-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இதனை அடுத்து, தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக, உயிரிழந்த சித்திக்கின் கழுத்தில் காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தினார்.
இந்த விசாரணையில் சித்திக்கின் பெற்றோர்கள் அவர்களது உறவினர் ஒருவரின் உதவியுடன் பெற்ற மகனைக் கொலை செய்தது அம்பலமானது. முகமது சித்திக் வேலைக்கு எதுவும் செல்லாமல் போதைக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சித்திக்கின் செயலை அவரது பெற்றோர் பலமுறை கண்டித்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற முகம்மது சித்திக்கின் தந்தை முகைதீன் அப்துல்காதர் (51), தாய் செய்யது அலி பாத்திமா (39) மற்றும் பாத்திமாவின் சகோதரர் திவான் ஒலி (39) ஆகியோர் கடந்த 5-ஆம் தேதி துப்பட்டா ஒன்றினால் முகம்மது சித்திக்கின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.