நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு: தென்காசி நீதிமன்றத்தில் குற்றவாளி சரண் - தென்காசி மாவட்ட நடுவர் நீதிமன்றம்
திருநெல்வேலி: நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தென்காசி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் அருணாச்சலம் மகன் நம்பிராஜன். இவர் அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி (எ) சாந்தி என்பவரை காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இதற்கு சாந்தியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் வசித்துவந்தனர்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி திருநெல்வேலி குறுக்குத்துறை ரயில்வே தண்டவாளத்தில் நம்பிராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சாந்தியின் சகோதரர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் மார்ச் 20ஆம் தேதி நாங்குநேரியில் உணவு விடுதி நடத்திவந்த தங்கபாண்டியனின் உறவினர்கள் ஆறுமுகம், சுப்பையா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், நம்பிராஜனின் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் பிணையில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நண்பகலில் 15-க்கும் மேற்பட்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் மறுகால்குறிச்சி கிராத்துக்குள் திடீரென்று புகுந்து நாட்டு வெடிகுண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் தெருக்களில் வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டது.
இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் நாலாபுறமும் ஓடினர். அப்போது அந்த கும்பலை சேர்ந்த சிலர் நம்பிராஜனின் தாயார் சண்முகத்தாய் (48), உறவினர் சாந்தி (45) ஆகியோரின் வீடுகளுக்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியதுடன், அரிவாளால் வெட்டி சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அத்துடன் சண்முகத்தாயின் தலையை துண்டித்து அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கழிவுநீரோடையில் வீசிவிட்டு கும்பல் தப்பி சென்றுவிட்டது. சாந்தியின் மகள் செல்வி (14) அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனை அடுத்து அந்த வழக்கில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளியாக கருதப்படும் மாடசாமி (35) என்பவர் தென்காசி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி பிரகதீஸ்வரன் முன்னிலையில் சரண் அடைந்தார்.
அவரை அக்டோபர் 9ஆம் தேதி வரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.