தென்காசி:மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும் சூழலில், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
இந்த நிலையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து உள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்றைய தினம் (நவ.13) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த வண்ணமாகவே காணப்படுகின்றனர்.