தென்காசி: தென்காசி மாவட்டம் பல்நோக்கு சேவை மையத்திட்டத்தை கைவிடக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக விவசாய கருவிகளை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் இன்று (அக்.03) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இருந்து மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விவசாய பயிர் கடன் தள்ளுபடி, 40 கிராமுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்த தள்ளுபடிக்கு உரிய தொகை அரசிடம் இருந்து முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால் லாபத்தில் செயல்பட்டு வந்த பெரும்பாலான சங்கங்கள் நஷ்டத்தில் உள்ளது.
இந்நிலையில், மேலும் நஷ்டத்திற்கு உள்ளாகி நிதிநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், இன்று தென்காசி மண்டல இணைப்பதிவாளர் அலுவலருக்கு முன்பாக, அனைத்து தொழிற்சங்கங்களின் மூலமாக கொடுக்கப்பட்ட வாகனங்களை தென்காசி அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி புளியங்குடி, சேர்ந்தமரம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ஏராளமான கூட்டுறவு சங்கங்களில் வேலை பார்க்கும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சங்கத்தின் அறிவிப்பு படி சங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விவசாய கருவிகளையும், வாகனங்களின் சாவியையும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து கண்டன கோஷங்கள் எழுப்பி 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அரசு பணி அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தலைவர் சித்திரை, பொதுச் செயலாளர் காளிதாசன், மாவட்ட பொருளாளர் சண்முக சாமி, கௌரவ பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் ஹரிகரன், மாவட்டத் துணைத் தலைவர் செந்தூர்பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் வேலம்மாள் முத்தையா, மாவட்ட போராட்ட குழு தலைவர் சமுத்திர பாண்டியன், மாவட்ட போராட்ட குழுச் செயலாளர் சௌந்தரராஜன், மாவட்ட ஆலோசனை குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல் - காரணம் என்ன?