தென்காசி:சங்கரன்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வருகை தந்திருந்தார். முன்னதாக தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக பாஜகவை நீக்கவில்லை, பாஜகவில் இருந்து தான் அதிமுக விலகி உள்ளது. அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி சண்டையை தீர்த்து வைத்தது பாஜக. பத்து நபர்கள் பட்டாசு வெடிப்பதற்கு இருந்தால், கூட்டணியை உண்டாக்கவும் செய்யலாம் அதில் இருந்து வெளியேவும் செல்லலாம்" என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாமல் 20% வாக்குகளை பெற்ற இயக்கம் பாரதிய ஜனதா கட்சி. பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக கூட்டணி முறிவு நஷ்டம் இல்லை, கூட்டணி முறித்தவர்களை கண்டு பச்சாதாபம் படலாம். கூட்டணி என்பது பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக மட்டும் தான். அதை தவிர கொள்கை ரீதியாக சம்பந்தம் ஒன்னும் இல்லை" என கூறினார்.
பின்னர், தான் நான்கு நாட்களாக மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இனிமேல் அது இருக்காது எனவும் தெரிவித்ததை அடுத்து அரங்கில் சிரிப்பலை எழுந்தது. மேலும் பாஜக ஒட்டி வைக்காவிட்டால் அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை என்றும், ஈபிஎஸ் தற்போது பொறுப்பில் இருக்கிறார் என்றால் அதற்கு பாஜக தான் காரணம் என்ற நன்றியை மறந்தால், நன்றி மறந்தவர் ஈபிஎஸ் என்று கூறி குற்றம் சாட்டினார்.