தொடர் கனமழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு தென்காசி: கடந்த ஒரு வாரங்களாக, தென்காசி மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் அதிகப்படியான மலையால் குற்றாலத்தின் பிரதான அருவிகளில் தண்ணீர் வீழ்ச்சி அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (டிச.1) நள்ளிரவு முதல் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கன மழையால், குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகமாகக் காணப்பட்டது.
குறிப்பாக, மெயின் அருவியில் பாதுகாப்பு வளையம் தாண்டி தண்ணீர் விழுகின்றது. மேலும், விடுமுறை நாட்கள் என்பதால், உள்ளூர் மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, சபரி மலைக்கு சாமி தரிசனம் சென்று திரும்பும் பக்தர்களின் கூட்டமும் அதிகமா காணப்பட்டது.
இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வெகு தூரத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்.. வேலூர் விவசாயிகள் வேதனை!