தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான புளியங்குடி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் அரியவகை மரங்கள் மற்றும் யானை, மான், கரடி, மிளாமுயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்தப் பகுதியில் பல ஏக்கர்களில் தென்னை, வாழை, எலுமிச்சை போன்ற பல்வேறு விதமான விவசாய பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூலிகை அடங்கிய தாவரங்களும், செடிகளும் அதிகளவில் காணப்படுவதால் வனத்துறையினர் இப்பகுதியை மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.
சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் அடிக்கடி தீப்பிடிப்பதும் அவற்றை வனத்துறையினர் துரிதமான முறையில் செயல்பட்டு தீயையை அணைப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க:“வீரலட்சுமியின் மற்றொரு அவதாரத்தை இனிமேல் பார்பீர்கள்”.. சீமானை எச்சரித்த வீரலட்சுமி!
இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான சிவகிரி வனப்பகுதியில் நேற்று (செப்.14) திடீரென தீ பற்றி காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், சிவகிரி வனத்துறை அதிகாரி மோனிகா தலைமையில், வனவர்கள் அசோக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிவகிரி வாசுதேவநல்லூர், புளியங்குடி பகுதியில் உள்ள வன ஊழியர்கள் மரக் கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், “மலைப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இலைகள் உதிர்ந்த நிலையில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்படும் உராய்வின் காரணமாக தீப்பிடித்துள்ளது. அதை உரிய நேரத்தில் வனத்துறை ஊழியர்கள் விரைந்து அனைத்துள்ளனர்.
தீயை அணைப்பதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இணைந்து வனப்பகுதியில் சென்று சிரமத்தையும் பார்க்காமல் தீயை அணைத்தனர். சிவகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை ஊழியர்கள் விரைந்து அணைத்ததால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:வாணியம்பாடி அருகே பழக்கடையில் திடீர் தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்