தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பெரிய, வட்டமான தலைகளோடு, துடிப்பான மஞ்சள் இதழ்களோடு சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்கியும், நல்ல விலைக்காக பூக்களை விளைவித்த விவசாயிகள் ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில், பார்ப்பவர் கண் கவரும் வகையில் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட சூரியகாந்தி பூவானது அன்றாட தேவைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள்:பார்ப்பதற்கு சூரியன் போன்று பிரகாசமாக காட்ச்சியளிக்கும் சூரியகாந்தி பூவின் விதையில், தேவையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் E, B, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன. சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக உதவுகிறது.
சூரியகாந்தி பூக்களின் விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள், எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. பாஸ்பரஸ் சத்தானது இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெயில் உள்ள வைட்டமின்-E சத்தானது இதயம், வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. இதில் உள்ள லினோலெனிக், ஓலிக் ஆகிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.
சூரியகாந்தி பூவின் விதையில் இரும்பு மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. அவை உடலின் களைப்பை நீக்கி, உடலுக்குத் தேவைப்படும் புத்துணர்வையும், ஆற்றலையும் வழங்குகிறது. மேலும், குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சூரியகாந்தி பூவின் விதைகளில் உள்ள வைட்டமின் - E மற்றும் செலீனியம் முதலான ஆன்டி ஆக்ஸிடன்ட் சாதாரண காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.