தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு: எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் போராட்டம் - வனத்துறையினர்

தென்காசி: கடையம் அருகே வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முதியவர் இறந்த விவகாரத்தில் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை தலைமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

By

Published : Jul 23, 2020, 4:20 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தோட்டத்து பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து அணைக்கரை முத்துவை வனத்துறையினர் நேற்று இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணையின்போது அணைக்கரை முத்துவிற்கு நெஞ்சுவலி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனத்துறையினர் அவரை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அணைக்கரை முத்து உயரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

இன்று காலை 6 மணி முதல் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் திரண்டிருந்த நிலையில் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டோர் உறவினர்களிடம் வனத்துறை பொறுப்பில் இருந்த நிலையில் அணைக்கரை முத்து இறந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கலைந்து செல்ல அறிவுறுத்தினார்.

ஆனால் ஆலங்குளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை தலைமையில் உறவினர்கள், பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும், மேஜிஸ்ட்ரேட் அறிக்கை வரும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details