தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் ; காரில் சென்றவர்களுக்கு அடி உதை! - Tenkasi news

திமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோசமிட்டு காரில் சென்றவர்களை, திமுகவினர் தாக்கியதோடு காரையும் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுக்கூட்ட இடம் அருகில் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷமிட்டவர்களுக்கு அடி.. உதை..!
திமுக பொதுக்கூட்ட இடம் அருகில் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷமிட்டவர்களுக்கு அடி.. உதை..!

By

Published : Jul 3, 2023, 10:22 PM IST

திமுக பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டவர்கள் மீது தாக்குதல்

தென்காசி மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அருகே ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டு காரில் சென்றவர்களை திமுகவினர் காவல் துறையினரின் கண் முன்னே சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்டம் முடித்த பிறகு ஆர்எஸ் பாரதி தனது காரில் ஏறி புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நெல்லை - தென்காசி சாலையில் வெள்ளை நிற கார் ஒன்று வந்தது. அதில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் குற்றால அருவியில் குளிப்பதற்காக சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் திமுகவின் கொடிகள் மற்றும் கூட்டத்தை கண்டதும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டவாறு காரில் சென்றனர்.

அப்போது சாலையில் கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட திமுகவினர் இதை கேட்டதும் கோசமிட்டுச் சென்ற காரை மறித்தனர். பின்னர், காரில் இருந்தவர்களிடம், ‘திமுக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பாரத் மாதா கி ஜெய்-னு எப்படி கூறலாம்’ என கேட்டு காருக்குள் இருந்த நபர்களை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். மேலும் காரை எட்டி உதைத்தும், கண்ணாடியை உடைத்தும் பயங்கர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், ஆக்ரோசத்துடன் திமுகவினர் அந்தக் காரையும், காரில் இருந்தவர்களையும் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தனர். பின்னர் தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற கூடுதல் காவல் துறையினர், திமுகவினரை தடுத்து நிறுத்த முற்பட்டதோடு காரில் இருந்தவர்களை அங்கிருந்து புறப்படுமாறும் அறிவுறுத்தினர்.

ஒரு வழியாக காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்து காரையும் காரில் இருந்தவர்களையும் அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பாவூர்சத்திரத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காரில் சென்றவர்கள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து தென்காசியில் உள்ள குற்றால அருவிக்கு குளிக்கச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து பாவூர்சத்திரம் காவல் துறையினர் காரில் சென்றவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக குறித்து அவதூறு; வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details