தென்காசிமாவட்ட ஊராட்சி குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தற்போது நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில், உள்ள 14 மாவட்ட கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பட்டியலிடப்பட்டது.
மொத்தமாக, 3 கோடியே 29 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிக்கப்பட்டது. அப்பொழுது, மாவட்டத்தில் உள்ள 14 கவுன்சிலர்களுக்கும் வெவ்வேறு விதமான நிதி ஒதுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து 2 -வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி கேள்வி எழுப்பினார்.
அப்பொழுது, அதற்கு பதில் அளித்த மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி, ''திமுகவின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருக்கு வேண்டிய கவுன்சிலர்கள் சிலர், மாவட்ட செயலாளரிடம் கூறி என்னை மிரட்டி அவர்களுக்கு அதிக நிதி கொடுக்க வைத்தார்கள். என்னை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் அழைத்து எனது செல்போனை பறித்துக்கொண்டு இதுபோன்று மிரட்டி ஒரு குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு அதிக நிதி ஒதுக்க செய்தார்கள்'' என மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி பதில் அளித்ததால் கூட்டமானது பெரும் பரபரப்பானது.