தென்காசி:தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை சங்கரலிங்கசுவாமி - கோமதி அம்பாள் வெவ்வேறு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் 8ஆம் திருநாளான நேற்று ஸ்ரீநடராஜர் பச்சை சாத்தி அலங்கரத்தில் நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று(ஏப்.15) சுவாமி - அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளிய நிகழ்ச்சியும், பின்னர் கோயிலில் இருந்து தேருக்கு தடை போடும் மக்களை மேளதாளம் முழங்க வரவேற்று வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.