நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வெளியில் வாங்கிக்கொள்ள பரிந்துரைத்த மருத்துவர்கள், ஊழியர்களை கண்டித்த இணை இயக்குநர் தென்காசி:செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் - மந்த்ரா தம்பதியினருக்குத் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் மந்த்ரா கருத்தரித்து பிரசவத்திற்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 12-ஆம் தேதி மந்த்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை அவரது கணவர் ஹரிஹரன் தென்காசி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சேர்த்துள்ளார். நீண்ட நேரமாக சுகப்பிரசவத்திற்கு மருத்துவர்கள் காத்திருந்த நிலையில், சுகப்பிரசவம் ஆகாததால் அறுவை சிகிச்சை மூலம் மந்த்ராவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தது முதல் அழுது கொண்டே இருந்துள்ளது. இதுகுறித்து, தம்பதியினர் பலமுறை மருத்துவர்களிடம் கூறியும் அவர்கள், எந்த விதமான சிகிச்சையும் அளிக்காமல், குழந்தைக்கு எறும்பு கடித்திருக்கும், பசிக்கும் என கூறி குழந்தை அழுவதற்கான காரணம் குறித்து எந்த விதமான பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், 10 நாட்கள் மேலாகியும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்த சூழலில், ஹரிஹரன் மறுபடியும் போய் மருத்துவர்கள் இடம் கூறவே மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்துள்ளனர். அப்பொழுது, குழந்தையின் இடது காலில் பிரசவத்தின் போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த ஹரிஹரன்-மந்த்ரா குடும்பத்தினர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, உடனே குழந்தைக்கு தற்போது மாவு கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவன குறைவால் குழந்தையின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமலிருந்ததால், தற்போது அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஹரிஹரன் மந்தரா தம்பதியினரின் குடும்பத்தினர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூழலில், தற்போது தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா, பிரச்சினையில் ஈடுபட்டு வருவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள், ஊழியர்கள் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தென்காசி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் அத்தியாவசிய மருந்து உட்பட அனைத்து பொருட்களையும் வெளியே உள்ள தனியார் மெடிக்கல் ஷாப்பில் வாங்க கூறியுள்ளனர்.
இது குறித்து நோயாளிகள் இணை இயக்குநரிடம் தற்போது புகார் அளித்துள்ள சூழலில் அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துகளும் உள்ள சூழலில், நோயாளிகளை ஏன் மருந்துகளை வெளியே வாங்க சொல்லுகிறீர்கள் என இணை இயக்குனர் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்துக் கண்டித்து வருகிறார். ஏழ்மையான மக்களின் நம்பிக்கையாகத் திகழ வேண்டிய அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று நிகழும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' நூதன முறையில் இளம்பெண் ஏமாற்றம்.. பஞ்சாப் இளைஞர்கள் கைது