ஆபத்தான முறையில் கயிற்றை கட்டி கடக்கும் காரிசாத்தான் ஊர்மக்கள் தென்காசி: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
அதேபோல் சங்கரன்கோவில் அருகே உள்ள காரிசாத்தான் கிராமத்தின் முகப்பு பகுதியில் தரைப் பாலத்துடன் கூடிய பெரிய நீரோடை அமைந்துள்ளது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பியது.
இந்நிலையில், தென்மலை பகுதியில் உள்ள முறியபஞ்சான் அணை நிரம்பி, அதனுடைய உபரி நீரானது காரிசாத்தான் கிராமத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரிய நீரோடை தரைப்பாலம் வழியாகச் சென்று வருகிறது. இதனால் மழைநீரானது காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால், காரிசாத்தான் கிராமத்தைச் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து தீவு போன்று காட்சியளிக்கிறது.
இதனால் காரிசாத்தான் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல், 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சூழ்நிலையில், ஊர் மக்களின் அத்தியாவசியத் தேவைக்காக காரிசாத்தான் கிராம மக்கள் மறுகரைக்கு கயிறு கட்டி ஆபத்தான முறையில் வெளியே சென்று வருகின்றனர்.
மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரண்டு நாட்களாக அத்தியாவசியத் தேவைக்கு கூட கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மருத்துவ முகாம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை செய்து தர வேண்டும் எனவும், மேலும் நீண்ட கால கோரிக்கையான அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து: டிச.21ஆம் தேதி தண்டனை அறிவிப்பதாக நீதிமன்றம் உத்தரவு!