தென்காசி:என் மண், என் மக்கள் நடைபயணத்தின் 2வது கட்ட நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் துவங்கினார். இந்த நடைபயணத்தில் பொட்டல்புதூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், சுமார் 6 மணியளவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடைபயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, தென்காசி சந்தை அருகே அண்ணாமலைக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயில் தெற்கு ரத வீதி வழியாக, கோயில் வாசல் வழியாக வந்த பொழுது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து, தென்காசி ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மின் விளக்குகள் எரியாததால் தொண்டர்கள் செல்போன்களில் டார்ச் லைட்டை எரியவிட்டபடி நடைபயணத்தை மேற்கொண்டனர்.