ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் அது நீர்நிலைகளில் உள்ள பிற உயிரினங்களை வேகமாக அழித்துவிடும். அதேபோல் நம் நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய மீன்களையும் முற்றிலும் அழித்துவிடும் தன்மைகொண்டது. எனவே, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் கிராமத்தில், குளம் ஒன்றில் குத்தகைத்தாரர் ஒருவர் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் இன மீன் வகைகளை வளர்ப்பதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மீன்வளத்துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட குளத்தில் தடைசெய்யப்பட்ட மீன்கள் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.