தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே லட்சுமியாபுரம் 5ஆம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் இசக்கிமுத்து. இவர் இந்திய துணை ராணுவத்தில் 13 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். தற்போது ஜம்முவில் பணியாற்றிவந்த இசக்கிமுத்து தனது சகோதரர் திருமணத்திற்காக விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
தனது விருப்பத்திற்கு மாறாக சகோதருக்கு திருமணம் நடைபெறுவதாக கூறி வீட்டிற்குச் செல்லாமல் விடுதியில் அறை எடுத்து தங்கியதோடு மனைவிக்கு, தான் விஷம் அருந்தி தற்கொலை செய்யப்போவதாக போன் செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
உயிரிழந்த ராணுவ வீரர் இசக்கிமுத்து இதுபற்றி தகவலறிந்து இசக்கிமுத்து தங்கியிருந்த விடுதிக்கு வந்த உறவினர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தபோது விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 2) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ராணுவ வீரர் தற்கொலை குறித்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இறந்த இசக்கி முத்துவிற்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளன.