தென்காசி:செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்குச் சொந்தமான வீடு ஒன்று இலத்தூர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் லட்சுமணன் கடந்த சில வருடங்களாக வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி வசித்து வந்து உள்ளார். இதன் காரணமாக, இலத்தூர் பகுதியில் உள்ள அவரது வீடானது நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டுக் கிடந்து உள்ளது.
இந்த நிலையில், தற்போது சொந்த ஊருக்கு வருகை தந்து உள்ள லட்சுமணன், தனது வீட்டைப் பராமரிப்புச் செய்து வாடகைக்கு விட முடிவு செய்து வீட்டினை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அவரது வீட்டிலிருந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்து உள்ளார். அப்போது, செப்டிக் டேங்கிற்குள் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்து உள்ளது.
அதைப் பார்த்த வேலை ஆட்கள் மற்றும் லட்சுமணன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். பின் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து இலத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து உள்ளனர். தகவலின் பேரில், விரைந்து வந்த இலத்தூர் காவல்துறை போலீசார் செப்டிக் டேங்கில் கிடந்த எலும்புக் கூட்டை மீட்டு உள்ளனர். பின் உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.