தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில், தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படையினர் குழு, மூன்று நிலை கண்காணிப்புக்குழு, ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு , ஒரு வீடியோப் பதிவு பார்வைக் குழு என 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மூலம் வாகன சோதனைகளை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் பறக்கும் படை அலுவலர்களின் வாகனச் சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், புளியரை பகுதியில் நேற்று(மார்ச் 8) இரண்டு பறக்கும்படை குழுவினரின் வாகனச் சோதனையில் கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 73 ஆயிரம் ரூபாயும், மீன் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 800 ரூபாயும், சுரண்டையை சேர்ந்த காய்கறி வாகனத்தில் 93 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் பிடிபட்டது.