சிவகங்கை: திருப்பத்தூர் அருகே கொட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சகானா மற்றும் சமிதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். 13 வயதான இரட்டை குழந்தைகள் சகானா மற்றும் சமிதா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொன்னையூர் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சகோதரிகள் தங்களது பாட்டி வீடான வடக்கு தாளம்பட்டிக்கு சென்றுள்ளனர். சகோதரிகள் இருவரும் அங்கு உள்ள பழைய கல்குவாரி குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு எதிர்பாராத விதமாக இரட்டை சகோதரிகள் நிலை தடுமாறி குளத்தில் நீந்த முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் குவாரி குளத்திற்குள் இறங்கி இறந்த சகோதரிகளின் உடலை மீட்டனர். இரட்டை சகோதரிகள் இறந்தது குறித்து நமணசமுத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீரில் மூழ்கி உயிரிழந்த இரட்டை சகோதரிகளின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்குச் சென்ற இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிவகங்கை அருகே பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!