சிவகங்கைமாவட்டம், சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து சிலைக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்படி, சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி, கோட்டை வேங்கைப்பட்டியில் 2010-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அங்கு ரேஷன் கடை, தார்ச் சாலை, குடிநீர்த் தொட்டி, தெருவிளக்கு வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடையாத நிலையில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்துக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
அதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தலை அடுத்து மீண்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கி 2012-ம் ஆண்டு முழுமை அடைந்தன. கடந்த 2016-ம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகும் சமத்துவபுரம் திறக்கவில்லை. இதனால் வீடுகள் பழுதடைந்து வீணாகி வந்தன.
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் - நெகிழ்ச்சியில் சிறுமி புஷ்பா இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால், சமத்துவபுரம் வீடுகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவபுரம் வீடுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனத்தொடர்ந்து அதற்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது சீரமைப்புப்பணிகள் முடிவுற்றநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் அதனைத்தொடர்ந்து பயனாளர்கள் 100 பேருக்கு சமத்துவபுர வீடுகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி சிறுமி புஷ்பாவின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் நலம் விசாரித்து வீட்டின் சாவியை வழங்கினார். சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு சென்ற முதலமைச்சர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமியரிடையே பேசி மகிழ்ந்தார். ஊஞ்சலில் விளையாடிய சிறுவர்கள் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைந்துள்ள நுாலகம், அங்கன் வாடி மையம், நியாயவிலைக்கடை உள்ளிட்டவைகளையும் திறந்து வைத்தார்.
ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை முதன்மைச்செயலர் அமுதா ஆகியோரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:அரசின் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு.. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..