குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்திய பேகனும், படர்வதற்கு வழி இன்றி தவித்த முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொடுத்த பாரியும் வாழ்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கின்றனர் சிவகங்கை பொத்தக்குடி கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது பொத்தக்குடி. இங்குள்ள தெருவிளக்கின் முதன்மை மின் பெட்டியில் கரிச்சான் குருவி ஒன்று குஞ்சு பொரித்து அடைகாத்த நிலையில் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் குருவி, அதன் குஞ்சுகளின் நிலையை அறிந்த கிராமத்து மக்கள் அதிலிருந்து வருகின்ற தெருவிளக்குகளுக்கான மின்சாரத்தை கடந்த ஒரு மாதமாக பயன்படுத்தாமல் கும்மிருட்டில் தெருக்களில் உலாவிவருகின்றனர்.
இதுகுறித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பு ராஜ் என்ற இளைஞர் கூறுகையில், “என்னுடைய வீட்டின் அருகே தான் தெருவிளக்குகளுக்கான முதன்மை மின் பெட்டி உள்ளது. வழக்கமாக நான் தான் தெருவிளக்குகளை 'ஆன்' செய்வேன். ஆனால் தற்போது கரிச்சான் குருவி ஒன்று குஞ்சுகளோடு அதில் குடி இருப்பதைப் பார்த்துவிட்டு சில நாள்கள் அவற்றுக்கு தொந்தரவு தராமல் 'ஆன்' செய்து வந்தேன்.
குஞ்சு பொரித்த குருவிக்காக மின்சாரத்தை தியாகம் செய்த பொத்தக்குடி கிராமத்தார் ஆனால் அதுவும் ஏதேனும் வகையில் அவற்றுக்கு தொந்தரவாக இருக்கும் என உணர்ந்து கிராமத்திலுள்ள அனைத்து பொது மக்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாக தகவல் அளித்து சில நாள்களுக்கு தெருவிளக்கு மின்சாரம் இல்லாமல், வீட்டு மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துவோம் எனக் கேட்டேன்’
இதற்கு எங்கள் பொத்தக்குடி கிராம மக்கள் அனைவரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதமாக நாங்கள் தெருவிளக்கு மின்சாரம் இன்றி குருவிக்காக கும்மிருட்டில் வாழ்ந்துவருகிறோம்” என்றார். பொத்தக்குடி கிராம மக்களின் இந்த தியாக மனப்பான்மை சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க...சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு