சிவகங்கை: மாநில அரசால் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால் மத்திய துணை இராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி எழுப்பினார். இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் மற்றும் கோயில் பொறுப்பாளர்கள், சுற்று வட்டார கிராம மக்கள் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்ட சமாதானக் கூட்டம் நேற்று (நவ.9) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோயில் தேரின் வெள்ளோட்டத்தை நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 21ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் சிவகங்கை தேவஸ்தான ஊழியர்களைக் கொண்டு, தேரை இழுத்து வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.