தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டு வண்டியில் ஒட்டகத்தை பூட்டி மணல் கடத்தல்

காளையார்கோவில் அருகே மாடு பூட்டப்படும் வண்டியில் ஒட்டகத்தை பூட்டி மணல் கடத்தலில் ஈடுபட்டபோது, வண்டியையும் ஒட்டகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை உரிமையாளரே ஒட்டகத்தை பராமரிக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாட்டு வண்டியில் ஒட்டகத்தை பூட்டி மணல் கடத்தல் - குழம்பிய காவல்துறை!
மாட்டு வண்டியில் ஒட்டகத்தை பூட்டி மணல் கடத்தல் - குழம்பிய காவல்துறை!

By

Published : May 31, 2022, 2:24 PM IST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவர் கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கிருந்து 2 மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய சரவணன், ராஜஸ்தானிலிருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் காவல் ஆய்வாளர் பாண்டி தலைமையிலான காவல்துறையினர் மறவமங்கலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாட்டுவண்டியில் ஒட்டகத்தை பூட்டிய நிலையில் வண்டி வந்ததை பார்த்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ஒட்டக வண்டியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், நாட்டார் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மணல் கடத்தப்பட்டு வந்த வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை ஒட்டகத்தை யார் பராமரிப்பது என்ற குழப்பம் காவல்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதனால், உரிமையாளர் சரவணனிடமே ஒட்டகத்தை பராமரிக்குமாறு அனுப்பியுள்ளனர். மணலை அள்ளுவதற்கு டிராக்டர், லாரி போன்றவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டகத்தை பயன்படுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!

ABOUT THE AUTHOR

...view details