சிவகங்கை: சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (39). இவர் பல ஆண்டுகளாகக் காவல் துறையினரால் தேடப்பட்டுவருகிறார். இவர் மீது இரண்டு கொலை வழக்கு, மூன்று போக்சோ வழக்கு, அடிதடி வழக்குகள் உள்பட பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் மணிகண்டன் நடமாடிவருவதாக சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீராளனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சிங்கம்புணரி காவல் சார் ஆய்வாளர் குகன், முதல் நிலை காவலர்கள் ராஜா, கார்த்திக் ஆகியோர் சிறப்புக் குழு அமைத்து மதுரவாயில் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் (அக்டோபர் 14) ஆயுத பூஜை அன்று மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை காவல் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பல ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி மணிகண்டன் மீது மூன்று சிறுமி பலாத்கார வழக்குகள், இரண்டு கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் இவர் ரவுடிகள் பட்டியலில் ஏ-பிளஸ் குற்றவாளியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பிடிபட்ட மணிகண்டனை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்த சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல் துறையினர், அவர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். துரிதமாகச் செயல்பட்டு பல ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியைக் கைதுசெய்த சிங்கம்புணரி காவல் துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரவுடி சுட்டுக்கொலை