தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் குடமுழுக்கு முறைகேடு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை கண்டதேவி கோயில் குடமுழுக்கில் பஞ்சாயத்து நிதி முறைகேட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாயத்து நிதி முறைகேடு வழக்கு
பஞ்சாயத்து நிதி முறைகேடு வழக்கு

By

Published : Mar 12, 2021, 1:27 PM IST

சிவகங்கை மாவட்டம், கண்டதேவி, சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த கேசவமணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2011-2016 ஆண்டு வரை சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் பஞ்சாயத்து தலைவராக இருந்த முருகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பஞ்சாயத்து நிதியை முறைகேடாக கையாண்டு பணத்தை எடுத்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. அந்தக் கோயில் குடமுழுக்கில் பஞ்சாயத்து நிதியில் ரூ5,44,067 எவ்வித முன் அனுமதியும் இன்றி எடுத்து செலவு செய்ததாக கணக்கு எழுதியுள்ளனர்.

உதாரணமாக ஜே.சி.பி. வைத்து இடத்தை சுத்தம் செய்ததாக ரூ.2 லட்சத்து செலவு செய்தாக கணக்குக் காட்டியுள்ளார். மேலும், கோயிலை சுற்றி பேரிகார்டு அமைத்ததாக ரூ.68 ஆயிரம் செலவு செய்ததாக கணக்கு எழுதி உள்ளார். ஆனால் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது சிவகங்கை சமஸ்தானம் மூலமாக பேரிகார்டு அமைப்பதற்கு ரூ.45 ஆயிரம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு முறைகேடுகளை செய்து ரூ5,47,064 வரை பல்வேறு இனங்களில் கணக்கு காட்டி முறைகேடாக பணத்தை எடுத்துள்ளனர்.

இதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறவில்லை. இதுகுறித்து பல்வேறு அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பஞ்சாயத்து நிதியை முறைகேடாக எடுத்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மநீம கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள்

ABOUT THE AUTHOR

...view details