காளையார்கோவில் நகர்ப் பகுதியில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர் சிவகங்கை: காளையார் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விளையாட்டுத் திடலில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்களை அடையாளம் கண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாவது, "கானப்பேரெயில், திருக்கானப்பேர், சோமநாத மங்கலம் என வழங்கப்படும் காளையார்கோவில், சங்ககாலம் முதல் இயங்கி வரும் ஊராகும்.
இதற்குச் சான்றாக பாண்டியன் கோட்டை திகழ்கிறது. காளையார்கோவில் நகரின் மையப் பகுதியில் வாள் மேல் நடந்த அம்மன் கோயிலுக்கு வடக்குப் பகுதியில் 33 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அகழி சூழ நிராவிக் குளத்துடன் பாண்டியன் கோட்டை தொல்லியல் மேடாகவும் காடாகவும் காட்சி தருகிறது.
புறநானூற்றின் 21வது பாடல் கூறும் அர்த்தம் : கானப்பேர் கோட்டைப் பற்றியும் அதன் அகழி பற்றியும் இப்பகுதியை ஆண்ட வேங்கை மார்பனை பாண்டியன், உக்கிரப் பெருவழுதி வெற்றி கொண்ட செய்தி பற்றியும் புறநானூற்றின் 21ஆவது பாடல் எடுத்துரைக்கிறது. மேலும் இதற்குச் சான்றாகப் பானை ஓடுகள் விரவிக் கிடப்பதோடு மோசிதபன் என எழுதப்பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு, பானை ஓட்டுக் கீறல்கள், வட்டச் சில்லுகள், சங்க கால ஓட்டு எச்சம், சங்க கால செங்கல் எச்சங்கள் முதலியன கிடைக்கப் பெற்றுள்ளன.
பொதுவாகச் சங்க காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். ஆனால், அதற்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது பெருங்கற்காலம் எனலாம். நகர்ப்பகுதியிலே இக்கல்வட்டங்கள் காணப்படுவதால் சங்க காலத்திற்கு முன்பிருந்தே இப்பகுதி மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது.
மறைந்து காணப்படும் பெருங்கற்காலத்தின் ரகசியம் :இறந்த மனிதனுக்கு மீண்டும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில் நல்லடக்கம் செய்து பெருங்கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்த காலங்களைப் பெருங்கற்காலம் என்கிறோம். இவ்வாறன கல்வட்டங்கள் பெருங்கற்கள் வட்ட வடிவமாக அடுக்கிக் காணப்படுகின்றன. காளையார்கோவில் தென்றல் நகரை அடுத்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல் முழுவதும் தரையில் புதைந்த நிலையில் அடுத்தடுத்து கல்வட்டங்கள் எச்சங்களாகக் காணக் கிடைக்கின்றன.
இவற்றைக் கொண்டு இப்பகுதி பெருங்கற்கால ஈமக்காடாக இருந்ததை அறிய முடிகிறது. மேலும் மேற்பரப்பிலே பெருங்கற்கள் இப்பகுதியில் சாலையோரங்களில் கிடப்பதும் இதற்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன. இப்பகுதியில் நல்லேந்தல், அ.வேளாங்குளம் போன்ற இடங்களில் சிதைவுறாத கல்வட்டங்கள் பெருமளவில் காணக் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் கோட்டையை அகழாய்வு செய்ய சிவகங்கை தொல்நடைக் குழு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து தொல்லியல் துறை அவ்விடத்தில் ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்று கூறிய நிலையில் காளையார்கோவில் நகர்ப்பகுதியில் கல்வட்ட எச்சங்கள் காணக் கிடைப்பது மேலும் ஒரு தரவாகப் பார்க்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:காரைக்குடியில் வாகனத்தை முந்தி செல்வதில் தகராறு; கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது