சிவகங்கை: காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திரதினத்தையொட்டி நடந்த பாதயாத்திரையில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது, இந்த பாதயாத்திரை 75வது சுதந்திர தினத்தை வலியுறுத்தியும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் குறித்து மக்களிடம் கொண்டு செல்லவும், மத்திய அரசை கண்டித்தும் நடக்கிறது.
நாட்டின் மொத்த விலைவாசி உயர்வு 15 சதவீதம், சில்லறை விலைவாசி உயர்வு 7 சதவீதம். பொதுவாக மின்சாரத்தை தொட்டால் தான் ‘ஷாக்’ அடிக்கும். ஆனால் தற்போது எந்த பொருளை தொட்டாலும் ‘ஷாக்’ அடிக்கிறது.
ஏழை, எளிய மக்கள் எந்தளவிற்கு துன்பப்படுகின்றனர் என்பதை தெருவில் நடந்தால் தெரியும்.
தற்போது மொத்த வேலையின்மை 8 சதவீதத்தை தாண்டியுள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டனர். 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்லாயிரம் சிறு, குறு நிறுவனங்களை மூடிவிட்டனர். 5,000 நிறுவனங்கள் இருந்த நகரில் தற்போது 500 நிறுவனங்கள் தான் உள்ளன. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.